BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Breaking News
Home / தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

நமது குல தெய்வம் சோளியம்மன் தேர் திருவிழா ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் புகழ்மிக்க திருவிழா ஆகும். முந்தைய காலக் கட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் தேர் நூற்றுக்கணக்கான நபர்கள் மூலம் தூக்கிச்சென்று பூஜை செய்யப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் டிராக்டர் மூலம் பூஜைக்கு தேர் கொண்டு செல்லப்படுகிறது. தேர் திருவிழாவைத் துவக்குவதற்கு முன்பு தேர் செல்லும் அனைத்து கிராமத்திற்கும் பண்டாரங்கள் மூலம் தகவல் அனுப்பி அனைவரையும் அழைத்து கூட்டம் ஏற்பாடு செய்து தேர் திருவிழாவை முடிவு செய்வார்கள். திருவிழா செய்தியை குலகுருவுக்கு அனுப்பி வைப்பார்கள். மற்றும் மண்ணூடையார், ஏகாளி, நாவிதன், தோட்டி, காவல்காரன் (மத்துராஜா) போட்டுலி(வேட்டு வைப்பவர்) நெரூர் மூப்பன்மார்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பி வைப்பார்கள். அனைத்து சமூகத்தாரும் ஒன்று கூடி தேர் திருவிழாவை தொடங்குவார்கள். முதலில் காப்புக்கட்டு வைபவம் தொடங்கும் மண்ணூடையார் கோவிலுக்கு வெளியில் பச்சை பந்தல் போட்டு புதுப்பானை கொண்டு வந்து பொங்கல் வைப்பர். நமது குலகுருவும், வெண்ணெய்மலை ஸ்தானிக அய்யரும் ஹோம பூஜைகளை நடத்துவர். இரவு 11 மணிக்கு மேல் பூஜைகள் தொடங்கும் பொங்கல் வைத்த பிறகு ஆட்டுக்கிடா வெட்டி அதன் இரத்தத்தை புதுச் சட்டியில் பிடித்து பொங்கலுடன் கலந்து சுந்து கட்டி அதில் நெருப்பு வைத்து கோயிலுக்கு வெளியில் சுற்றி வருவார்கள். வரும் பொழுது பொங்கல் சாதத்தை கோவிலுக்கு உள்ளே வீசுவார்கள். (இதனுடைய அர்த்தம், அனைத்து தெய்வங்களையும், தேவதைகளையும் தேர் திருவிழாவிற்கு அழைப்பதாக கொள்கிறார்கள்) இந்நிகழ்ச்சி மடிந்தவுடன் அனைவரும் கோவிலுக்குள் வந்து அம்மனுக்கு அபிஷேகம் முடித்து புஜைகளைத் தொடங்குவார்கள். பூஜை முடிந்தவுடன் காப்புக் கட்டு வைபவமாக, மூலவருக்கும் பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். இத்துடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடையும் தொடர்ந்து ஐந்து நாட்கள் மண்டகப்படி நடக்கும் உற்சவ சுவாமி பறுப்பாடு செய்து ஆத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் ஆத்தூர், வீரசோளிபாளையும், நத்தமேடு ஆகிய ஊர்களுக்கு சென்று பூஜை முடிந்தவுடன் கோவிலுக்கு வரும் ஐந்தாவது நாள் அம்மை அழைத்தல், கோவிலில் குதிரை கொண்டு வந்து அதற்கு மாலை மரியாதை செய்து அதன் கால்களிலும் பால் தெளித்து துலுக்க விடுவார்கள். அத்துடன் மண்டகப்படி நிகழ்ச்சிகள் முடிவடைந்துவிடும்.
மறுநாள் ரதோற்சவம் துவங்கும், அன்று காலையில் இருந்தே தேர்திருவிழா வேலை துவங்கி விடும். தேரின் உபகரணங்களை சோளியம்மன் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு ஆத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று ஆசாரியார் தேர் பூட்டும் வேலையை துவங்கி விடுவார். தேர் வேலை முடிந்து அலங்காரம் செய்தவுடன் தேர் சோளியம்மன் கோவிலை வந்து அடையும்,. நமது குலகுரு ஹோம பூஜைகளை நடத்துவார். இறுதியில் உற்சவ அம்மனுக்கு முன்பு ஆட்டுக்குட்டி அறுத்து தயாராக உள்ள எல்லைச் சட்டியில் ரத்தத்தைப் பிடித்துக் கொள்வர். அதன் பிறகு புறப்பட்டு ரதத்தில் வந்து அமர்ந்தவுடன் தேர் முதலில் அருகாமையில் உள்ள சோளீஸ்வரர் கோவிலுக்கு சென்று முதல் பூஜை முடித்துக் கொண்டு மற்ற கிராமங்களுக்கு புஜைக்கு செல்லும். தமிழ்நாட்டிலேயே அதிகமான கிராமங்களுக்கு சென்று அருளாசி வழங்கும் தெய்வம் சோளியம்மன். வெண்ணெய்மலையில் உற்சவ அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். பிறகு தேர் 16 கோல் மண்டபத்தை சென்று அடைந்தவுடன் தேரை அங்கு நிறுத்தி நேரூர் மூப்பன்மார்கள் பொங்கலை ஏற்றுக்கொண்டு எல்லைச் சட்டி உடைத்து பின்பு கரூர் கடைவீதி வழியாக மீண்டும் பல கிராமங்களுக்கு அருளாசி வழங்கி கடைசியாக கோவிலை வந்தடையும். மீண்டும் மக்கள் நீராட்டுக்காக, தேர் மாரியம்மன் கோவில், ஆத்தூர் வீரசோளிபாளையம், நத்தமேடு ஆகிய ஊர்களுக்கு பூஜைக்குச் செல்லும். மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் அம்மனை கோவிலுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள். மீண்டும் மண்டகப்படி நடைபெறம் கடைசியாக விடையாற்று மண்டகப்படி நடைபெறும். அன்று பூளதுச்சட்டியில் பொங்கல் வைத்து கிடாக்குட்டி அறுத்து ரத்தத்தை பொங்கல் சோறுடன் கலந்து கோவிலுக்கு உள்ளிருந்து வெளியில் வீசுவார்கள். இந்நிகழ்ச்சி திருவிழாவிற்கு வந்திருந்த தெய்வங்களையும், தேவதைகளையும் அவர்களுடைய இடத்திற்கு அனுப்புவதாக ஜதீகம். இத்துடன் இனிதே தேர் திருவிழா நிகழ்ச்சி முடிவடையும்.
செவி வழிச் செய்தி
ஆத்தூர் ஸ்ரீ சோளியம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருந்த சமயத்தில் பல நூறு ஆண்டுகளுகு;கு முன் ஈரோடு திருச்சி ரயில்வே பாதை வேலை நடந்து கொண்டிருந்தபோது ஆத்தூர் ஸ்ரீ சோளியம்மன் தேர், ரயில்வே பாதையைக் கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் மறுத்ததாகவும், உடனே மேலதிகாரிக்கு இச் செய்தி தெரிவிக்கப்பட்டு. மேலதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பார்தபோது, அந்த மேலதிகாரியின் கண்களுக்கு நம் குலதெய்வத்தை நான்கு முனி தெய்வம் சுமந்து கொண்டு நின்ற காட்சி தெரியவே, அவர் அதிர்ச்சியடைந்து, அனுமதி அளித்ததோடு வருடத்திற்கு 14 ரூபாயும், ஒரு ஆட்டுக்கிடாயும் 14 பக்கா அரிசியும் நமது குலதெய்வத்திருக் கோவிலுக்கு கொடுக்கும்படி உத்திரவு போட்டுவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.